வாய்க்கு வந்தத பேசக்கூடாது.. பேசும் போது நிதானம் தேவை… ஆ ராசாவின் கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2024, 6:21 pm
வாய்க்கு வந்தத பேசக்கூடாது.. பேசும் போது நிதானம் தேவை… ஆ ராசாவின் கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டனம்!
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்தில் இனி திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.
அவர் பேசுகையில், “ஒரு மொழியை மட்டுமே பேசும் மக்களை கொண்டது தான் இந்தியா. ஆனால், இந்தியா நாடு அல்ல, துணைக் கண்டம். தமிழை மட்டுமே பேசும் தமிழ்நாடு ஒரு தேசம். மலையாளத்தை பேசும் கேரளா ஒரு தேசம். ஒடியாவை பேசும் ஒடிசா ஒரு தேசம். நாங்கள் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் என்பதை ஏற்கமாட்டோம் என பேசினார்.
இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸே கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆ.ராசாவின் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சுப்ரியா ஸ்ரீனேட் கூறியதாவது:-ஆ.ராசாவின் கருத்துக்களுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. அத்தகைய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன்.
இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர், சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். ராமர் வாழ்க்கையின் லட்சியமாகும். ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு.
ராசா தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். நான் அதை ஆதரிக்கவில்லை. பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.