தலைநகர் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர், காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான அஞ்சலியின் ஸ்கூட்டியில் பின்புறத்தில் அமர்ந்து நிதி என்ற அவரது தோழி பயணித்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் சாட்சியான அஞ்சலியின் தோழி நிதி செய்தியாளர்களிடம் கூறும்போது, அஞ்சலி குடிபோதையில் இருந்ததாகவும், காரில் சென்றவர்கள், அஞ்சலி வாகனத்தில் சிக்கியது தெரிந்தே ஓட்டியதாகவும் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
அப்போது விபத்தில் சிக்கிய இளம்பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்தப் பெண்ணின் ஆடை கிழிந்து, அவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு காரில் யாரோ இழுத்துச் செல்லப்படுவதாக போலீசாருக்கு அதிகாலை 3.24 மணியளவில் காஞ்ச்வாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.
ஆனால், கார் வேகமாகச் சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க இயலாமல் போயுள்ளது. பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடப்பதாக மற்றொரு அழைப்பு போலீசாருக்கு சென்றுள்ளது.
இதனையடுத்து, ரோகிணி மாவட்ட காவல்துறை குற்ற பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு சாலையில் கிடந்த இளம்பெண்ணை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அந்த இளம்பெண் மீது மோதிய காரில் 5 பேர் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரை ஓட்டிச் சென்றவர், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றாரா? என்பது பற்றி அறிய மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கி.மீ வாகனத்தை ஓட்டிச் சென்ற பிறகு தான், அவர்களுக்கு அந்தப் பெண் காரில் சிக்கியுள்ளதே தெரிய வந்ததாகவும். அதன் பிறகு அவர்கள் அப்பெண்ணின் உடலை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் தலை மற்றும் முதுகில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படாததால், பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை என்று பிரேதப் பரிசோதனை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கிய இளம்பெண் அஞ்சலி ஸ்கூட்டியில் தனியாக வரவில்லை என்றும், அவருடன் அவரது தோழி ஒருவரும் வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
ஹோட்டல் ஒன்றில் இருந்து இளம்பெண்ணும் அவரது தோழியும் ஒன்றாக வெளிவரும் சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டன. முதலில் ஸ்கூட்டியை பலியான இளம்பெண்ணின் தோழி ஒட்டிச்செல்ல பாதி வழியில் இளம்பெண் வண்டியை தானே ஓட்டுவதாக வாங்கி ஒட்டிச் செல்கிறார்.
இந்தக் காட்சி அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஞ்சலி ஸ்கூட்டியை ஓட்ட அவரது தோழி பின் இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார்.
கார் மோதியபோது ஸ்கூட்டி நிலை தடுமாறிய நிலையில் அஞ்சலி சாலையில் விழுந்துள்ளார். இதனால் அவர் மீது கார் ஏறியுள்ளது. அதே சமயத்தில் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி நிதி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார்.
தன் கண் எதிரே தோழி பலியானதால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அலறியபடியே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சிசிடிவி காட்சி தகவல்களின் அடிப்படையில் அஞ்சலியின் தோழியை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர் காரில் வந்தவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டே வந்ததாகவும், அவர்களது கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விபத்து நடந்தபோது அஞ்சலி மதுபோதையில் இருந்ததாகவும் அவரது தோழி அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் தான் அதிகமாக பயந்துவிட்டதால் போலீசாரிடம் தகவல் சொல்லாமல் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறார்.
அஞ்சலி போதையில் இருந்ததால் வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று தான் வலியுறுத்தியதாகவும், அதையும் மீறி அவர் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும் தோழி நிதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஞ்சலி காருக்கில் அடியில் மாட்டிக்கொண்டது காரில் சென்றவர்களுக்கு தெரியும் என்றும், அவர் அலறியும், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்தை நேரில் பார்த்த சாட்சியான தோழி கூறியுள்ள இந்த பரபரப்பு தகவல், வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.