போலீசார் உதவியுடன் பரிசுப்பொருள் பட்டுவாடா செய்யும் திமுகவினர்?: தட்டிக்கேட்ட அதிமுகவினர் கைது…கோவையில் சலசலப்பு..!!
Author: Rajesh14 February 2022, 9:45 am
கோவையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை திமுக பிரமுகர் வீட்டில் இறக்கி வைக்க சென்ற திமுகவினர் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை கோவைப்புதூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் இறக்கி வைக்கப்படுவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிமுகவினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடு இருந்த பகுதிக்கு என்ற நிலையில் அங்கிருந்த திமுகவினர் சொகுசு கார் ஒன்றில் புறப்பட்டனர்.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அந்த காரை மறித்த அதிமுகவினர் காருக்குள் பரிசுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே அந்த காரை முழுமையாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காரில் சென்ற திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை சோதனை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பத்து பேரைக் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது தேசிய கல்யாணசுந்தரம், திமுகவிற்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் நள்ளிரவு ஒரு மணி அளவில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யுமாறு தாங்கள் கூறிய நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக காவல் துறையினர் தங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார். இதனால் அந்த பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு நிலவியது.