நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது..!!
Author: Rajesh7 February 2022, 10:52 am
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 பதவிகளுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 பதவிகளுக்கும், 490 பேரூராட்சிகளில் 7,621 பதவிகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தொடங்கியது. கடந்த 4ம் தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14 ஆயிரத்து 701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23 ஆயிரத்து 354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36 ஆயிரத்து 361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி உள்ளதா என்பதை பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இந்நிலையில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.