திருப்பூர் திமுகவில் நீயா? நானா? போட்டி: தேர்தலுக்கு முன்பே இப்படியா…குழப்பத்தில் திமுக தொண்டர்கள்..!!
Author: Rajesh2 February 2022, 5:58 pm
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட திமுகவை சேர்ந்த 2 பெரும் தலைவர்களிடையே உட்கட்சி பூசல் கிளம்பியுள்ளதால் திமுக தொண்டர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.
திருப்பூரில் கடந்த 30 ஆண்டுகளாக மாநகர திமுகவை கையில் வைத்துக்கொண்டு கட்சியில் செல்வாக்குடன் வலம் வருபவர் செல்வராஜ். இவர் 2 முறை திருப்பூர் நகராட்சித் தலைவராகவும், திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராகவும் இருந்தவர். தற்போது, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும், திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கேயத்தில் வென்ற சாமிநாதனும், தாராபுரத்தில் வென்ற கயல்விழி செல்வராஜும் அமைச்சராகிவிட்டதால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதாக கடும் கடுப்பில் இருந்து வருகிறார். இதுபோக, அமைச்சர் சாமிநாதனுக்கும், செல்வராஜூவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், ‘என்னதான் சாமிநாதன் திருப்பூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும், திருப்பூர் மாநகரமே என் கன்ட்ரோல தான் இருக்கு. திமுக தலைமையிடத்துல பேசி என்னோட ஆள் ஒருத்தர மேயராக்கி சாமிநாதனுக்கு செக் வைக்குற பாருங்க’ என்று நெருங்கியவர்களிடம் வீரவசனம் பேசி வருகிறாராம்.
நான் மட்டும் சும்மாவா இருப்பேன் என அமைச்சர் சாமிநாதனும், ‘எனக்கு வேண்டப்பட்ட ஆள மேயராக்கி செல்வராஜ் சகாப்தத்தையே முடிக்கிறேன்’ என அவரும் களத்தில் இறங்கியுள்ளாராம். தேர்தலுக்கு முன்பே திருப்பூர் திமுகவில் தீப்பற்றத் தொடங்கியுள்ளதால், இப்போ நாங்க யாருக்கு ஆதரவா இருக்கிறது என திமுக தொண்டர்கள் குழம்பிபோயுள்ளதாக பிரபல வார நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி பேசுபொருளாகியுள்ளது.