2-வது ஒருநாள் கிரிக்கெட் : 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

Author: kavin kumar
21 January 2022, 11:04 pm

இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போலாந்து பார்க்கில் இன்று நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்தப் போட்டி வாழ்வா..? சாவா..? என்ற நிலையில் இந்தியா இந்தப் போட்டியை விளையாடியது.டாஸ் வென்ற கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், தவான் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 63 ரன்னுக்கு முதல் விக்கெட்டை தவான் (29) பறிகொடுத்தார். இதன் பின்னர் வந்த கோலி, ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – பண்ட் ஜோடி, சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.

இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன் விகிதத்தை குறைய விடாமல் பார்த்துக் கொண்டனர். அரைசதம் விளாசிய கேஎல் ராகுல் 55 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பண்ட்டும் 85 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஸ்ரேயாஷ் (11), வெங்கடேஷ் ஐயர் (22) என விக்கெட்டை இழந்த நிலையில், மீண்டும் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் கையில் பொறுப்பு வந்தது. அவர் அதனை சிறப்பாக செயல்படுத்தினார்.38 பந்துகளில் 40 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அஸ்வினும் (25 நாட் அவுட்) பக்கபலமாக இருந்து ரன்களை குவித்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. தென்னாப்ரிக்கா அணி தரப்பில் ஷாம்ஷி 2 விக்கெட்டும், மார்க்ரம், மகாராஜ், மஹாலா, பெலுக்வயோ ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலானும், டி காக்கும் இறங்கினர். தொடக்கம் முதல் டி காக் அதிரடியாக ஆடினார். இந்திய பவுலர்கள் இண்ட ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மலான் 91 ரன்னில் வெளியேறினார். அப்போது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா 35 ரன்னில் அவுட்டானார்.அடுத்து இறங்கிய மார்கிரமும், வான் டெர் டுசனும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மார்கிராம் 37 ரன்னுடனும், வான் டெர் டுசன் 37 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?