2வது டி20 போட்டி; இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
Author: kavin kumar26 February 2022, 11:18 pm
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேசத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர்.
இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். அணியின் ஸ்கோர் 67ஆக இருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் குணதிலகா(38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, அசலங்கா 2 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து கமில் மிஷாரா(1 ரன்) மற்றும் சண்டிமால்(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர். இப்படி இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 47 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.அவருக்கு பக்கபலமாக நின்ற தொடக்கவீரர் நிசங்கா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ஓவரில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.அதன்பின்னர் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடியதால், செட்டில் ஆக சற்று நேரம் எடுத்துக்கொண்டார் சஞ்சு சாம்சன். செட்டில் ஆனபின்னர் லஹிரு குமாரா வீசிய 13வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டு, அதே ஓவரில் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன்.
சாம்சன் 25 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சாம்சன். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு, சஞ்சு சாம்சன் அடித்து ஆடிய 13வது ஓவருக்கு பின்னர், பெரிதாக ஸ்டிரைக் கிடைக்கவில்லை. ஏனெனில் 13வது ஓவரில் சாம்சன் வெளுத்து வாங்கிவிட்டு அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜடேஜா, வந்ததிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். பவுண்டரிகளாக விளாசிய ஜடேஜா, ஸ்டிரைக்கை தானே தக்கவைத்துக்கொண்டு அடித்து நொறுக்கினார். 18 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 45 ரன்களை விளாசினார் ஜடேஜா. ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவிக்க, இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 18வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டி20 தொடரை வென்றது.