மீண்டும் மீண்டும் GOAT என நிரூபணம் … சச்சின் சாதனையை சமன் செய்த கோலி.. அந்த விஷயத்துல கோலி தான் பெஸ்ட்!!
Author: Babu Lakshmanan10 January 2023, 6:16 pm
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்பேரில், முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (83), கில் (70) சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தாலும், கோலி மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 45வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சொந்த நாட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்தியாவில் 20 சதங்களை அடிக்க சச்சின் 160 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார்.
ஆனால், கோலி வெறும் 99 இன்னிங்சில் அந்த இலக்கை எட்டியுள்ளார். அதேபோல, தென்னாப்பிரிக்காவின் அம்லா (69 இன்னிங்ஸ்) 14 சதங்களும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (151 இன்னிங்ஸ்) 14 சதங்களும் அடித்துள்ளனர்.
அதேபோல, ஒரு நாட்டுக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 9 சதங்களை அடித்துள்ளார்.
விராட் கோலியோ, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா 9 சதங்களை அடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 சதங்கள் அடித்துள்ளார்.