வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த மேத்யூஸ் ; எவ்வளவு கெஞ்சியும் கேட்காத ஷகிப் உல் ஹசன்.. வைரலாகும் வீடியோ…!!!
Author: Babu Lakshmanan6 November 2023, 4:43 pm
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரிலேயே குஷால் பெராரா ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, குஷால் மெண்டிஸ் (19), நிஷன்கா (41), சமர விக்ரமா (41) சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, 6வது விக்கெட்டுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். கிரீஸுக்கு வந்த அவர் அணிந்திருந்த ஹெல்மேட்டின் ஸ்டிராப் அறுந்திருந்தது. இதைத் தொடர்ந்து, தனது அணியினரிடம் வேறு ஹெல்மெட்டை எடுத்து வரக் கூறினார். அதற்கு தாமதமானதால், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் உல் ஹசன், டைம்டு அவுட் கேட்டு நடுவரிடம் அப்பில் செய்தார்.
இதனை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட் என அறிவித்தனர். இதனால், அதிர்ந்து போன மேத்யூஸ், ஷகிப் உல் ஹசனிடம் மன்றாடினார். ஆனால், அவர் இசைந்து கொடுக்க மறுத்தால், வேறு வழியின்றி, ஒரு பந்தும் பிடிக்காமல், மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.
வெளியே சென்ற அவர், பவுண்டரி எல்லையின் அருகே தனது ஹெல்மெட்டை தரையில் ஓங்கி அடித்து, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு விக்கெட் இழந்த பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேட்ஸ்மென் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது ஐசிசி விதியாகும். அதனை மீறியதால் மேத்யூஸ் அவுட் என அறிவிக்கப்பட்டார். இந்த முறையில் ஒரு வீரர் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும்.