பரபரப்பை எகிற வைத்த ஆஷஸ்… கம்மின்ஸ் அதிரடி…லயன்ஸ் நிதானம்.. இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா…

Author: Babu Lakshmanan
21 June 2023, 9:45 am

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 15ம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்டத்தின்போது, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தது. இறுதியில், 4ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டிய சூழல் இருந்தது. இந்த சூழலில் 5வது ஆட்டம் தொடங்கும் போது மழை குறுக்கிட்டதால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆட்டம் தொடங்கிய பிறகு, ஸ்காட் போலண்ட் (20), டிராவிஸ் ஹெட் (16), கேமரான் கிரீன் (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், வெற்றிக்காக தனிமனிதாக கவாஜா மட்டுமே போராடினார். ஒரு கட்டத்தில் அவரும் 65 ரன்னுக்கு ஆட்டமிழக்க, வெற்றி பெறப் போவது யார்..? என்ற சூழல் உருவானது. ஆனால், கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாட, நாதன் லயன் அவருக்கு பக்கபலமாக துணை நின்றார்.

கடைசி ஒரு மணி நேரத்தில் இந்த இணையின் அபார ஆட்டத்தினால் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ் 44 (73) ரன்களும், நாதன் லயன் 16 (28) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 28ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…