ஆஸி.,ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் : யாருமே செய்யாத வரலாற்று சாதனையை படைத்த ரஃபேல் நடால்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 8:34 pm

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் மற்றும் இரண்டாவது செட்டை மெத்வதேவ் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை நடால் வென்றார்.

இதனால் சாம்பியன் ஆகப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், 5வது செட் 7-5 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இறுதி போட்டியில், அவர் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார். இதன்மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஃபேல் நடால்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!