சரித்திர சாதனை படைத்த கோலி… ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி., வீரர்கள்… இந்திய அணி அசத்தல் வெற்றி!!
Author: Udayachandran RadhaKrishnan19 பிப்ரவரி 2023, 2:25 மணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து இருந்தது.
3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இன்று ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மள மளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஆஸ்திரேலிய அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. ஒரு ரன் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115-ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எளிதான வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது
1
0