முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா.. 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2023, 6:32 pm
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 164 ரன்கள் எடுத்ததிலிருந்து இன்று ஐந்தாம் நாள் நடத்தை தொடங்கியது.
விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இன்னிங்சை தொடங்கினர். விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பொறுமையுடன் விளையாடிவந்த ரஹானே ஸ்டார்க் வீசிய பந்தில் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களமிறங்கிய ஷார்துல் தாக்குரும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து இறங்கியவர்களும் ஆட்டமிழக்க இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நேத்தன் லியோன் 4 விக்கெட்களும், போலண்ட் 3 விக்கெட்களும், ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் அனைத்து வித கோப்பைகளையும் வென்றுள்ள அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.