திடீரென ஓய்வை அறிவித்த ஆஸி., அணியின் அதிரடி ஆட்டக்காரர் : அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan7 February 2023, 9:38 am
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், தொடக்க அதிரடி ஆட்டக்காரருமாக இருப்பவர் ஆரோன் பின்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களில் ஒருவராவார். 36 வயதான ஆரோன் பின்ச் இதுவரை 254 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
146 ஒருநாள், 103 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலிய அணியை 76 டி20 மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் மூலம் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பின்ச் அறிவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர் (172 ரன்) என்ற பின்ச்சின் உலக சாதனை என்றும் போற்றப்படக்கூடியது.