வெற்றியுடன் பிரியாவிடை கொடுத்த ஆஸி.,.. கண்கலங்கி நின்ற டேவிட் வார்னர்… பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டிலும் வெற்றி…!!
Author: Babu Lakshmanan6 January 2024, 1:00 pm
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து விட்டது.
இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான நடந்த இந்தப் போட்டியே அவரது கடைசி டெஸ்டாகும். தனது கடைசி இன்னிங்சில் அவர் 57 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.
போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் உரையாற்றிய வார்னர் கண்கலங்கிய நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.
37 வயதான வார்னர் 2011ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 8786 ரன் எடுத்துள்ளார். 26 சதமும், 37 அரை சதமும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன்னாகும். சமீபத்தில் ஒருநாள் போட்டியிலும் வார்னர் ஓய்வை அறிவித்ததால், இனி டி20 போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த உடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், டேவிட் வார்னருக்கு பரிசாக அளித்தார்.