147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரொம்ப மோசம்… கேப்டவுன் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி குறித்த முக்கிய சுவாரஸ்ய தகவல்…!!
Author: Babu Lakshmanan4 January 2024, 9:33 pm
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்கா அணி 55 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிராஜ் 6 விக்கெட்டும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோலி (46), ரோகித் (39), கில் (36), ராகுல் (8) ஆகியோரை தவிர, மற்ற வீரர்கள் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். இதன்மூலம் 95 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.
பிறகு, மீண்டும் 2வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்ரிக்கா பேட்டர்கள் வரிசையாக விக்கெட்டுக்களை இழந்தனர். இதன்மூலம், முதல் நாளில் மட்டும் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 23 விக்கெட்டுக்களை இழந்தனர்.
இதைத் தொடர்ந்து, 2வது நாளிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் மார்க்கரம் மட்டும் சதம் (106) அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில், 176 ரன்னுக்கு தென்னாப்ரிக்கா அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 79 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.
இதனிடையே, கேப்டவுனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 107 ஓவர்களே, அதாவது வெறும் 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இதன்மூலம் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, 1932ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா போட்டியில் 656 பந்துகளில் (109.2 ஓவர்கள்) முடிவடைந்ததே சாதனையாகும்.