சும்மா சொல்லக்கூடாது.. கேப்டன் கேப்டன்தாயா.. இந்திய அணியை வீழ்த்தி புதிய சாதனை படைத்த வில்லியம்சன்.. 5 ரன்னில் மிஸ் ஆன மற்றொரு சாதனை…!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 4:40 pm

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி, டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் தவான் மற்றும் கில் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கில் 50 ரன்னுடனும், தவான் 72 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஷ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

பின்னர், ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர், சஞ்சு சாம்சன் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. ஒரு கட்டத்தில் சாம்சன் 36 ரன்னுக்கு கேட்ச் ஆகி அவுட்டானார்.

கடைசி 4 ஓவர் இருக்கையில் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடினார். நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சவுதி, மில்னே ஓவர்களில் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டார். ஸ்ரேயாஷ் ஐயரும் தனது தரப்பில் அதிரடி காட்ட முயன்ற போது, 80 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புற்கு 306 ரன்கள் சேர்த்தது. 16 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஃபெர்குஷன், சவுதி தலா 3 விக்கெட்டுக்களையும், மில்னே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, தொடக்க வீரர்கள் ஆலன், கான்வே ஏமாற்றம் அளித்தனர். ஆனால், கேப்டன் வில்லியம்சன், லாதம் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

ஒருகட்டத்தில் அதிரடியை ஆரம்பித்த லாதம் சதம் விளாசினார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம், 47.1 ஓவர் 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களை எடுத்து நியூசிலாந்து வெற்றி வாகை சூடியது. லாதம் 145 ரன்களுடனும், வில்லியம்சன் 94 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உள்ளூர் மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை (13 வெற்றி) பெற்ற கேப்டன் என்ற பெருமையையும் வில்லியம்சன் பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை சொந்த நாட்டில் நடக்கும் போட்டிகளில் இதுவரை நியூசிலாந்து அணி தோற்கவில்லை.

அதேபோல, 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை 2வது முறையாகத்தான் அந்த அணி எட்டியுள்ளது. இதற்கு முன்பு, 2020ல் ஹாமில்டனில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 348 ரன்களை நியூசிலாந்து அணி திருப்பி அடித்துள்ளது.

மேலும், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஒரு இணை 200க்கும் அதிகமான ரன்களை குவித்ததில், வில்லியம்சன் – லாதம் ஜோடி (221 நாட் அவுட்) ரன்கள் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலில் இடத்தில் மோர்கன் – ரவி போபாரா (226 ரன்கள் நாட் அவுட்) உள்ளனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!