இந்திய வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது…. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் விருதை அறிவித்தது மத்திய அரசு..!!
Author: Babu Lakshmanan20 December 2023, 6:57 pm
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் வீரர்களுக்கு 2024ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்த இந்திய வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அண்மையில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்வித்தை வீரர்கள் அஜய் ரெட்டி, ஒஜாஸ் பிரவின், அதிதி கோபிசந்த் சுவாமி, பார வில்வித்தை வீராங்கனை சீதல் தேவி, தடகள வீரர் பருல் சவுத்ரி மற்றும் முரளி ஸ்ரீசங்கர், குத்துச்சண்டை வீரர் முகமது ஹுசாமுதீன், குதிரையேற்றம் வீரர் திவ்யா கீர்த்தி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா, கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர், ஹாக்கி வீரர் கிரிஷன் பகதூர் பதக், ஹாக்கி வீராங்கனை சுசீலா சானு, லான் பால் வீராங்கனை பிங்கி, துப்பாக்கிச் சுடுதல் அஷ்வரி பிரதாப் சிங் தோமர், மல்யுத்தம் வீராங்கனை அன்டிம் பங்கல், டேபிள டென்னிஸ் வீராங்கனை அயிஹா முகர்ஜி, துப்பாக்கிச்சூடுதல் வீராங்கனை ஈஷா சிங், ஸ்குவாஸ் வீரர் ஹரிந்தர் பால் சிங் சந்து , மல்யுத்தம் வீரர் சுனில் குமார், தற்காப்பு கலை வீராங்கனை நாவொரெம் ரோஷிபினா தேவி, கபடி வீரர் பவன் குமார், கபடி வீராங்கனை ரித்து நெகி, கோ கோ வீரர் ஸ்ரீன் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரா தடகள வீரர் மகாவீர் சைனி, மல்யுத்த வீரர் லலித் குமார், செஸ் வீரர் ஆர்பி ரமேஷ், ஹாக்கி வீரர் ஷிவேந்தர் சிங் மற்றும் கணேஷ் பிரபாகரன் ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கபடி வீராங்கனை கவிதா, பாட்மிண்டன் வீராங்கனை மஞ்சுஷா கன்வர், ஹாக்கி வீரர் வினீத் குமார் ஷர்மாவுக்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட்மிண்டனில் அசத்திய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
0
0