அம்பத்தி ராயுடு ஓய்வை அறிவித்தது உண்மையா..? நடப்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan14 May 2022, 1:54 pm
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வை அறிவித்ததாக வெளியாகி வரும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற்ற நிலையில், லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரூ, டெல்லி, பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா அணிகள் அடுத்த 3 இடங்களுக்கு கடும் போட்டி போட்டு வருகின்றன.
இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில், ஐபிஎல் மகுடத்தை பலமுறை சூடிய சென்னை, மும்பை அணிகள் தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளன.
குறிப்பாக, சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 8ல் தோல்வியும், 4ல் வெற்றியும் பெற்று, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை அணியின் மோசமான நிலையை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், மற்றுமொரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது, சென்னை அணியின் நம்பிக்கை பேட்டர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடரோட ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது கடைசி தொடர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக இரு தலைசிறந்த அணிகளுக்காக விளையாடியது அற்புதமான தருணமாகும். சென்னை, மும்பை அணிகளுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பத்தி ராயுடுவின் இந்தப் பதிவு சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், அவர் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றாரா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.