2வது முறையாக மகுடம் சூடியது கோவை கிங்ஸ் : 104 ரன்களில் நெல்லை அணியை வீழ்த்தி சாம்பியன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 8:18 am
Quick Share

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு நெல்லையில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், நெல்லை ராயல் கிங்சும் கோதாவில் குதித்தன.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கோவைக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. சுஜய் 7 ரன்னிலும், சச்சின் 12 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் நெல்லை பந்து வீச்சை அடித்து நொறுக்கி அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தினர். விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் 57 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து வந்த கேப்டன் ஷாருக்கான் (7 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும், முகிலேசும், அதீக் உர் ரகுமானும் இணைந்து ரன்மழை பொழிந்ததுடன், ஸ்கோர் 200-ஐ கடப்பதற்கும் உதவினர்.

20 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரகுமான் 50 ரன்களில் (21 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

முகிலேஷ் 51 ரன்னுடனும், ராம் அரவிந்த் 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பிற்பகுதியில் நெல்லையின் பீல்டிங் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவற விட்டனர். இதுவும் கோவையின் எழுச்சிக்கு சாதகமாக மாறியது.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நெல்லை அணியில் நிரஞ்ஜன் (0), முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அஜிதேஷ் (1 ரன்) 2-வது ஓவருக்குள் வீழ்த்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து நெருக்கடியில் இருந்து நெல்லையால் மீள முடியவில்லை.

மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த நெல்லை அணி 15 ஓவர்களில் 101 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் கோவை அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.

நெல்லை அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 27 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட்டும், ஷாருக்கான் 3 விக்கெட்டும் அறுவடை செய்தனர்.

டி.என்.பி.எல். கோப்பையை கோவை கிங்ஸ் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் கோப்பையை பகிர்ந்து இருந்தது. மகுடம் சூடிய கோவைக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த நெல்லைக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 477

    0

    0