ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே.. பெங்களூரு சாதனையை முறியடித்து அபாரம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2023, 7:53 pm
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி டெல்லி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டனர். முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 87 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களும், சிவம் துபே 22 ரன்களும் குவித்தனர்.
ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் போது அதிகமுறை 200 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது சென்னை அணி. இதற்கு முன் பெங்களூரு சாதனை படைத்திருந்த நிலையில், அதனை முறியடித்தது சென்னை அணி. அதன்படி, சென்னை அணி 22, பெங்களூரு அணி 21 என ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார். அதன்பின் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
வார்னர் ஆட்டமிழக்காமல் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என அடித்து அரைசதம் கடந்தார். இதன்பின், அக்சர் படேல் மற்றும் ஹக்கீம் கான் ஆட்டமிழந்தாலும் வார்னர் தனது ஆட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், சென்னை அணி வீரர்கள் விடா முயற்சியால் வார்னரின் விக்கெட்டை பறித்தனர்.
முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் மட்டுமே 86 ரன்கள் குவித்துள்ளார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன மற்றும் மகேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது சென்னை அணி. இதுவரை 12 முறை ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.