தோனி ஜி.. கொஞ்ச நஞ்ச மரியாதையாவது உங்களுக்கு கிடைக்குதே : சாக்ஷி மாலிக் வருத்தமான பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2023, 1:34 pm
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சென்னை அணிக்கும், கேப்டன் தோனிக்கும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கும், கேப்டன் தோனிக்கும் தனது வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.
அந்த வாழ்த்து செய்தியோடு, குறைந்த பட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான எங்கள் போராட்டம் இன்னும் தொடர்கிறது என தங்கள் போராட்டம் குறித்தும் பதிவிட்டு இருந்தார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 38 நாட்களாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.