‘இது என்னடா உலகக்கோப்பை சாம்பியனுக்கு வந்த சோதனை’ ; சம்மட்டி அடி அடித்த ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து படுமோசமான தோல்வி..!!
Author: Babu Lakshmanan22 November 2022, 5:55 pm
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
ஏற்கனவே, 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அந்த இரண்டிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் ஹெட் மற்றும் வார்னர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை கொன்னெடுத்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 38.1 ஓவரில் 269ஆக இருந்த போது வார்னர் (106) ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹெட் 152 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் ஓரளவுக்கு ரன்களை குவித்ததால் 48 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸி.,யின் வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சில் சிக்கியது. இதனால், இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தது. அந்த அணியின் 31.4 ஓவர்களில் 142 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ராய் 33 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஜாம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், அபாட் தலா 2 விக்கெட்டுகளும், ஹசில்வுட், மார்ஷ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வொயிட் வாஷ் செய்தது.