246 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ; ஜெய்ஸ்வால் அதிரடி ; முதல் நாளில் இந்திய அணி அபாரம்…!!

Author: Babu Lakshmanan
25 January 2024, 6:53 pm

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.

பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விக்கெட்டுக்கள் சரிந்தாலும் கேப்டன் ஸ்டோக்ஸ் மட்டும் தனியொரு ஆளாக போராடி 70 ரன்கள் குவித்து கடைசியாக ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுக்களும், பும்ரா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா, ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 80ஆக இருந்த போது 24 ரன்னில் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவருடன் கில் 14 ரன் எடுத்து விளையாடி வருகிறார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…