நட்பு-னா என்னனு தெரியுமா..? விடைபெற்றார் ரோஜர் பெடரர்… கண்ணீர் விட்டு கதறி அழுத நடால்…நெகிழச் செய்யும் வீடியோ!!
Author: Babu Lakshmanan24 September 2022, 1:28 pm
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சக வீரர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர். அண்மையில் இவர் தனது ஓய்வை அறிவித்தார். அதுவும் 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று நடந்த லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ரோஜர் பெடரர் விளையாடினார். உலக அணியை எதிர்த்து விளையாடிய ஐரோப்பிய அணியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் நடாலும், பெடரரும், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் இணையுடன் மோதினார்.
இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது. டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.
பின்னர் ரோஜர் பெடரர் பேசுகையில், என் வாழ்நாளில் இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்ட பெடரர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனை பார்த்து நடாலும் தேம்பி தேம்பி அழுதார். பெடரர் ஓய்வு பெறுவதை பொறுக்க முடியாமல், நடால் அழுதது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.