ருத்ரதாண்டவம் ஆடிய SKY… கலக்கிய குல்தீப் யாதவ்… தென்னாப்ரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!!
Author: Babu Lakshmanan15 December 2023, 9:12 am
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து பக்கபலமாக விளையாடிய ஜெய்ஷ்வால் 60 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பேட் செய்த தென்னாப்ரிக்கா வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் (25), டேவிட் மில்லர் (35), பெரேரா (12) மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்தனர். எஞ்சியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 95 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.