100வது டெஸ்ட்டில் அமர்க்களப்படுத்திய அஸ்வின்… பொட்டிப்பாம்பாக சுருண்ட இங்கிலாந்து ; 5வது டெஸ்டிலும் இந்தியா எளிதில் வெற்றி..!!!
Author: Babu Lakshmanan9 March 2024, 2:57 pm
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு இங்கிலாந்து அணி அவுட்டானது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 477 ரன்கள் குவித்தது.
இதனால், 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 3வது நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்ப முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 195 ரன்னுக்கு ஆல் ஆவுட்டாகினர். அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 84 ரன்னுடன் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதோடு, 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
100வது போட்டியில் விளையாடிய அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் கைப்பற்றினார்.