இது எனக்கு மகிழ்ச்சி தராது.. கனத்த இதயத்துடன் விடை பெறுகிறேன் : கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்ரீசாந்த்!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2022, 10:01 pm
இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் உள்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கேரளாவில் பிறந்த இவர், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். டோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.
இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார்.
சூதாட்ட குற்றச்சாடுகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல் என இந்த முடிவை கருதுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.