அஸ்வின் குடும்பத்திற்கு என்னாச்சு…? சாதனை படைத்த கையோடு போட்டியில் இருந்து விலகல் ; அவசர அவசரமாக சென்னை திரும்பியதால் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 8:30 am

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

இதைத் தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் ஷர்மா (131), ஜடேஜா (112), அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

நேற்று 2வது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் டக்கெட் 133 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் க்ரவுலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 500 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் 2வது இடத்தையும், சர்வதேச அளவில் 9வது இடத்தையும் அவர் பிடித்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள், இன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகி உள்ளார். இந்த சவாலான நேரத்தில் பிசிசிஐயும், இந்திய அணியும் அவருக்கு பக்க பலமாக துணை நின்று முழு ஆதரவு அளிக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “அஸ்வினின் தாயார் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். அவர் ராஜ்கோட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்நேரத்தில் அவரது தாயாருடன் இருக்க சென்னை திரும்பியுள்ளார்,” என தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1135

    0

    0