இங்கிலாந்து போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலி லீவு எடுக்கணும் : முன்னாள் வீரர் சொன்ன ஐடியா..!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2022, 7:59 pm
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி நல்ல பார்மில் இருந்து வருகிறார், இந்த தொடரில் அதிக (246) ரன்கள் குவித்த வீரராக கோலி திகழ்கிறார். இதனால் அரையிறுதி போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து வீரர்கள் அதிக முனைப்பு காட்டுவார்கள்.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து போட்டியின்போது விராட் கோலி விடுமுறை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேடிக்கையான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கோலி பார்மில் இல்லாத நேரத்தில் நான் அவரை ஆதரித்தேன். அவர் ரசிகர்களை மகிழ்விக்க தெரிந்தவர். அவர் விளையாடும்போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் தேவை.
அவருக்கு உற்சாகம் தேவை. ஆனால் சில வருடங்களாக அவருக்கு அது இல்லாததால் அவர் வழி தவறிவிட்டார். ஆனால் தற்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்று.
இதனால் கோலி மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். நெருங்கிய நண்பராக, நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அரையிறுதியில் விராட் ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும். விராட் கோலி நன்றாக விளையாடும்போது, அவரைச் சுற்றி மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படத் தொடங்குகின்றனர், என கூறியுள்ளார்.
0
0