கணவர் சோயிப் மாலிக்கை விவகாரத்து செய்யும் சானியா மிர்சா..? இன்ஸ்டாவில் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
Author: Babu Lakshmanan18 January 2024, 12:04 pm
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கணவரை விவகாரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் ரசிர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2003ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வந்தார். இந்தியாவில் ஆண்கள் மட்டுமே டென்னிஸில் பங்கேற்று வந்த நிலையில், பெண்களாலும் முடியும் என்பதை உணர்த்தும் விதமாக, டென்னிஸ் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
2009 ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு, 2012 பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றார். அதேபோல, 2015ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015 அமெரிக்க ஓபன், 2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் பெரும் விவாதப் பொருளாக இருந்தது. பாகிஸ்தான் வீரரை கரம் பிடித்திருந்தாலும், அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.
இருவருக்கும் இசான் மிர்சா மாலிக் என்னும் மகன் உள்ள நிலையில், சானியா மற்றும சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வந்த நிலையிலும், இருதரப்பினரும் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சானியா மிர்சா.
இந்த நிலையில், விவாகரத்து தொடர்பான தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அமைந்துள்ளது. அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரியில், “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பதும், ஃபிட்டாக இருப்பதும் கடினமானது தான். இதில் உங்களுக்கான கடினமான ஒன்றை தேர்வு செய்யுங்கள். கடனில் இருப்பதும், நிதி விஷயத்தில் மிகச்சரியாக இருப்பதும் கடினமானது தான்.
இதில் ஒரு கடினத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள். தொடர்புடன் இருப்பதும், தொடர்பு இல்லாமல் இருப்பதும் கடினமானது தான். இதில் கடினமானதை தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை என்பது எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமானதாக தான் இருக்கும். ஆனால் நம் எந்தமாதிரியான கடினம் என்பதை நாம் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமான தேர்ந்தெடுங்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களையும் சானியா மிர்சா நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், கணவரை சானியா மிர்சா விவகாரத்து செய்யப்போகிறாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.