ருத்ரதாண்டவம் ஆடிய ருத்து.. சென்னை அணிக்காக 2வது வீரர்… ஒரு சிக்சர் அடிச்சாலும் புதிய மைல்கல்லை எட்டிய தோனி..!!!
Author: Babu Lakshmanan31 March 2023, 10:11 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டம், பாட்டம் என களைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள், கான்வே (1), மொயின் அலி (23), ஸ்டோக்ஸ் (7), ராயுடு (12) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கெயிக்வாட் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 9 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார்.
இதன்மூலம், சென்னை அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் 11 சிக்சர்களை அடித்துள்ளார். ராபின் உத்தப்பா, மெக்குலம், மைக் ஹசி ஆகியோர் தலா 9 சிக்சர்களையும் அடித்துள்ளார்.
அதோடு, ஐபிஎல் தொடக்க போட்டியில் அதிக ரன்களை விளாசிய தொடக்க வீரர்களில் கெயிக்வாட் 3வது இடத்தில் உள்ளார். மெக்குலம் (கொல்கத்தா) 158 ரன்களுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா (மும்பை) 98 (நாட் அவுட்) 2வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல, இறுதிகட்டத்தில் வந்து அதிரடி காட்டிய கேப்டன் தோனி, 7 பந்துகளுக்கு 14 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடங்கும். இந்த சிக்சரின் மூலம் 200வது சிக்சரை தோனி அடித்துள்ளார். மேலும், ஒரு அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி 5வது இடத்தில் உள்ளார். கெயில் 239 சிக்சர் (ஆர்சிபி), டிவில்லியர்ஸ் 228 (ஆர்சிபி), பொல்லார்டு 223 (மும்பை) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.