ஐபிஎல் வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத்.. கடைசி ஓவரில் லக்னோ அணி ஏமாற்றம்..!!

Author: Babu Lakshmanan
28 March 2022, 11:37 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டம் இன்று மும்பையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் எதுவுமின்றி லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, டிகாக் (7), மணீஷ் பாண்டே (6) ஆகியோரின் விக்கெட்டுக்களையும் ஷமி அடுத்தடுத்து வீழ்த்தினார். லீவிஷும் (10) அவுட்டனார். இதனால், 29 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து, தீபக் ஹுடாவுடன் இளம்வீரர் பதோனி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடியதுடன், அதிரடியும் காட்டத் தொடங்கினார். இதனால், லக்னோ அணி சரிவில் இருந்து மீண்டது. தீபக் ஹுடா அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் விளையாடிய இளம் வீரர் பதோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரே ஓவரில் 15 ரன்களை விளாசினார் பதோனி. அவரும் 54 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

வெறும் 22 வயதேயான பதோனி, அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டெல்லியைச் சேர்ந்த பதோனியை ஏலத்தில் எடுக்க கம்பீர்தான் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பல கணிப்புகள் தவறினாலும், இந்த முறை சரியானதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும், ஹர்திக் பாண்டியா மற்றும் திவாதியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டநிலையில், 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை பெற்றது.

இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை, அதுவும் அறிமுகப் போட்டியிலேயே கைப்பற்றியது குஜராத் அணி.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!