முறியடிக்கப்படாத கோலியின் சாதனை… டாப் கியரில் பறக்கும் கில்லின் ஆட்டம் ; இறுதிப் போட்டியில் சாதனை படைப்பாரா..?

Author: Babu Lakshmanan
27 May 2023, 9:46 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கில்லின் அபார ஆட்டத்தால் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2வது குவாலிஃபையர் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா (18) ஏமாற்றம் அளித்தாலும், வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை கில் ஆரம்பித்தார். முதலில் அரைசதத்தை மெதுவாக எட்டிய அவர், மும்பை அணியின் பந்துகளை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால், 49 பந்துகளில் மீண்டும் சதத்தை பதிவு செய்தார்.

மொத்தம் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகளோடு 129 ரன்னுக்கு ஆட்டமிழந்த கில், 831 ரன்களுடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். இதன்மூலம், ஒரு சீசனில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 973 ரன்களுடன் இருக்கிறார். சென்னை அணியுடனான இறுதிப் போட்டியிலும் கில் அதிரடி காட்டும் பட்சத்தில் கோலியை நெருங்க வாய்ப்புள்ளது.

அதேபோல, ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் 3 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலி, பட்லர் தலா 4 சதங்களுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இறுதியில் ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சனின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் காயம் காரணமாக விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா (8), வதேரா (4) ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா அதிரடியாக ஆடினார். 14 பந்துகளில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், க்ரீன் (30), சூர்யகுமார் யாதவ் (61) ஓரளவுக்கு ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 18.2 ஓவர்களில் மும்பை அணி ஆல்அவுட்டானது. இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதுகின்றன.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!