அதிவேக அரைசதம் அடித்த லீவிஷ்… சிக்சர் மழை பொழிந்த பதோனி.. சென்னை அணிக்கு ஏமாற்றம் கொடுத்த லக்னோ…!!

Author: Babu Lakshmanan
31 March 2022, 11:53 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியை போராடி வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் கெயிக்வாட் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் உத்தப்பா அதிரடி காட்டினார். அவருடன் சேர்ந்து மொயின் அலியும் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.

உத்தப்பா வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்து (50) ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தாலும், அவரது பணியை ஷிவம் துபே தொடர்ந்தார். மொயின் அலி (35), துபே (49), ராயுடு (27), ஜடேஜா (17), தோனி (16) ஆகி யோர் அடுத்தடுத்து ரன்களை குவித்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் சேர்த்தது.

இந்தப் போட்டியில் 16 ரன்களை குவித்த தோனி, டி20 போட்டிகளில் 7,000 ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 5வது வீரராக இடம்பிடித்துள்ளார். கோலி (10,326 ரன்கள்), (ரோகித் 9,936), தவான் (8,818), உத்தப்பா (7,120), தோனி (7,001) ஆகியோர் அந்தப்பட்டியலில் உள்ளனர்

இதைத் தொடர்ந்து, விளையாடிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் (40), டிகாக் (61) சிறப்பான ஆரம்பத்தை அமைத்து கொடுத்தனர். இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்களின் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டாலும், யாரும் நிலைக்கவில்லை. ஆனால், மறுமுனையில் லீவிஷ் மட்டும் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார்.

கடைசி இரு ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், துபே வீசிய 19வது ஓவரில் மட்டும் லீவிஷ் – பதோனி ஜோடி 25 ரன்களை அடித்து அதிரடி காட்டினார். இதில், 23 பந்துகளில் 55 ரன்களை விளாசிய லீவிஷ் இந்த சீசனின் அதிவேக அரைசதத்தை அடித்தார்.

இதைத் தொடர்ந்து, இளம் வீரர் முகேஷ் வீசிய பந்தில் பதோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை லக்னோ அடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியே அடைந்துள்ளது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…