நின்னு ஆடிய கோலி – டூபிளசிஸ் ஜோடி… இந்த முறை அதிர்ஷ்டம் RCB பக்கம்… ஐதராபாத்தை எளிதில் வீழ்த்திய பெங்களூரூ…!!
Author: Babu Lakshmanan19 May 2023, 9:37 am
ஐதராபாத்தில் நடந்த வாழ்வா..? சாவா..? போட்டியில் பெங்களூரூ – ஐதராபாத் அணியை எதிகொண்டு விளையாடியது. இதில், டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு மோசமான தொடக்கமே அமைந்தது. அபிஷேக் சர்மா (11), திரிபாதி (15) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், க்ளாசனுக்கு பக்க பலமாக விளையாடி கொடுத்தார். மறுமுனையில் க்ளாசன் அதிரடியாக விளையாடி, சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பந்துகளை பறக்கவிட்டார்.
இறுதியில் 49 பந்துகளில் சதமடித்த அவர் (104) ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதைத் தொடர்ந்து, ப்ரூக் (27 நாட் அவுட்) கைகொடுக்க ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது.
187 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்களூரூ அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி, டூபிளசிஸ் அதிரடியாக விளையாடினர். இதனால், மளமளவென ரன்கள் குவிந்தது. ஒரு கட்டத்தில் ஆர்சிபி பேட்டர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ஐதராபாத் அணியினர் கோட்டை விட்டனர்.
இதனை கச்சிதமாக பயன்படுத்திய இருவரும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்குமாக பறக்க விட்டனர். இருவரும் சேர்ந்து 172 ரன்களை சேர்த்திருந்த போது, சதமடித்த கோலி ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 6வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து டூபிளசிஸ் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, 4 பந்துகள் எஞ்சிய நிலையில் பெங்களூரூ அணி வெற்றி பெற்று, பிளே ஆஃப்புக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரூ அணி வெற்றி பெறும் பட்சத்தில், பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறும்.
0
0