தோனி சொன்னதை நிரூபித்த ஜடேஜா… டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதலிடம்!!!

Author: Babu Lakshmanan
9 March 2022, 6:31 pm

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜடேஜா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே அண்மையில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முதல் இன்னிங்சில் 175 ரன்கள் (நாட் அவுட்) விளாசிய ஜடேஜா, பந்து வீச்சில் 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மே.இ.தீவுகளின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி புதிய நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஜடேஜா இடம்பிடித்துள்ளார். ஜடேஜா டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் உச்சத்தை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
ஒரு வாரத்திற்கு நம்பர் 1 ஆக இருந்தார். ஜடேஜா பந்துவீச்சு தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 17 வது இடத்தைப் பிடித்தார். மேலும் பேட்டிங் தரவரிசையில் 54 வது இடத்தில் இருந்து 37 வது இடத்திற்கு வந்தார்.

இதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களுடன் பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 63வது இடத்திற்கு முன்னேறினார். 185 ரன்கள் விளாசிய பாகிஸ்தானின் மற்றொரு வீரர் அசார் அலி, பத்து இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு வந்தார் அசார் அலி. முதல் டெஸ்ட் போட்டியில் 48 ரன்களுக்கு குறைவாக எடுத்த ஆஸ்திரேலிய வீஅர் டிராவிஸ் ஹெட், 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றார்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் மார்னஸ் லபுஷேன் நீடிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, அடுத்தடுத்த இடங்களில், ரூட், ஸ்மித், வில்லியம்சன், கோலி, ரோஹிட் சர்மா, ட்ராவிஸ் ஹெட், கருன ரத்னே, பாபர் அசாம், ரிஷப் பண்ட் உள்ளனர். பவுலிங்கில் முதலிடத்தில் கமின்ஸ் நீடிக்கிறார். அடுத்தடுத்த இடங்களில், அஸ்வின், ரபாடா, ஷாஹின் அப்ரீடி, கைல் ஜேமிசன், சவுதி, ஜேம்ஸ் ஆண்டர்சன், நீல் வாக்னர், ஹேசில்வுட் பும்ரா உள்ளனர்.

டாப் டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜாவை தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர், அஸ்வின், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், கைல் ஜேமிசன், கொலின் டி கிராண்ட் ஹோம், கமின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா சதம் விளாசிய நிலையில், அவர் இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என்று தோனி சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது வைரலாகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!