ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜெய்ஸ்வால்.. சாஹல் சுழலில் சிக்கிய கொல்கத்தா!!
Author: Udayachandran RadhaKrishnan11 May 2023, 10:07 pm
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கி இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தனர். ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் இருவரும் ஆட்டமிழக்க, வெங்கடேச ஐயர் களமிறங்கி பொறுப்பாக விளையாடினார். ஒருபுறம் பவுண்டரிகள், சிஸேர்கள் அடித்து வெங்கடேச ஐயர் அரைசதம் கடக்க, மறுபுறம் நிதிஷ் ராணா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் 10 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியில் அனுகுல் ராய் மற்றும் சுனில் நரைன் களத்தில் நிற்க, கடைசி பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேச ஐயர் 57 ரன்களும், நிதிஷ் ராணா 22 ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ராஜஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால், பந்துகளை பவுண்டரி, சிக்ஸர்களாக விரட்டினார். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் அதிரடி காட்ட மறுமுனை பட்லர் டக்அவுட் ஆனார்.
ஆனால் ஜெய்ஸ்வால் சரவெடி நிற்கவில்லை. தொடர்ந்து அதிரடியாக ஆடி ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த சாதனையை படைத்தார்.