விமர்சனங்களுக்கு பதிலடி… மளமளவென சரிந்த விக்கெட்டுக்கள் ; ஜடேஜாவுடன் கைகோர்த்து வெற்றியை அள்ளிய KL ராகுல்!!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 9:56 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும், மார்ஷ் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, எந்த ஆஸ்திரேலிய பேட்டர்களும் தாக்குபிடிக்கவில்லை. ஸ்மித் (22), இங்கிலீஷ் (26), லபுஷக்னே (15), க்ரீன்(12) ஆகியோரை சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆஸ்திரேலியா அணி 188 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில், ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் (3), விராட் கோலி (4), சூர்யகுமார் யாதவ் (0), கில் (20) என அடுத்தடுத்து விக்கெட்டைக்களை இழந்தனர். 39 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது, ஹர்திக் (25) ஆட்டமிழந்தார்.

பின்னர், ஜடேஜா, கேஎல் ராகுல் இணை நிதானமாக ஆடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். 40வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ஜடேஜா (45), கேஎல் ராகுல் (75) கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடந்த சில போட்டிகளில் சொதப்பிய கேஎல் ராகுல் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்மேன் ஆர்மியாக நின்று அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் கேஎல் ராகுல்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…