மிரள வைத்த ஆட்டம்… ஒற்றை ஆளாக ஆப்கனை பறக்கவிட்ட மேக்ஸ்வெல் ; கபில்தேவின் சாதனையை முறியடித்து அபாரம்…!!!
Author: Babu Lakshmanan8 November 2023, 8:38 am
மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மும்பையில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த ஆப்கன் அணி, இப்ராஹிம் ஜத்ரான் (129 நாட் அவுட்), ரஷித் கான் (35), ரஹமத் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்தது. இந்தப் போட்டியில் சதம் விளாசிய இப்ராஹிம் ஜத்ரான், முதல் சதம் அடித்த ஆப்கன் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஹெட் (0), மார்ஷ் (24), வார்னர் (18), இங்கிலிஷ் (0), ஸ்டொய்னிஸ் (6), ஸ்டார்க் (3) என 91 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதனிடையே, விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும் ஒருபுறம் மேக்ஸ்வெல் நங்கூரம் போல நிலைத்து நின்று அதிரடி காட்டினார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாலும், அணியின் வெற்றிக்காக வலியுடன் களத்தில் நின்று வெளித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால், ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனியொரு ஆளாக போராடிய மேக்ஸ் (201) இரட்டை சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதோடு, சேஸிங்கில் இந்திய வீரர் கபில் தேவ் (175), அடித்த ரன்னின் சாதனையையும் முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.