12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம்.. வாழ்த்து மழையில் மனு பாக்கர் : பரிசுடன் அவர் சொன்ன வார்த்தை!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 8:13 pm

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் தான் பதக்கம் வெல்ல பகவத் கீதை காரணமாக இருந்துள்ளதாக வெண்கலம் வென்ற மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம் இது. நான் அதற்கான ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களைப் பெற தகுதியானது. இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம்.

தனிப்பட்ட முறையில் என்னால் இது நம்பவே முடியவில்லை. நான் கடைசி ஷாட் வரை நம்பிக்கையைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்றேன். இந்த முறை வெண்கல பதக்கம் தான் கிடைத்தது. அடுத்த முறை தங்கம் வெல்வேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. நான் பகவத் கீதையை எப்போதும் படிப்பேன். அது எனது மனதிலேயே இருந்துவிட்டது.

நீ எதைச் செய்ய வேண்டுமா அதை மட்டும் செய்.. என்ற பகவத் கீதை வரி தான் எனக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.. மற்றதை விட்டுவிடுங்கள். விதியை உங்களால் மாற்றவே முடியாது.. இதுதான் எனது மனதில் ஓடியது.

நீங்கள் கர்மாவில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் என்ன கிடைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது. அதுவே எனது மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதில் இருந்து மீண்டு வரத்தாமதம் ஆனது. ஆனால், போனவை போகட்டும்.. அது கடந்த காலம்.. இனி நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தேன். மேலும், இந்த பதக்கம் என்பது அணியின் கூட்டு முயற்சிதான். நான் வெறும் கருவி மட்டுமே” என்று மனு பாக்கர் கூறினார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?