374 ரன்கள் அடித்தும் தோல்வி… சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீசுக்கு ஷாக் கொடுத்த நெதர்லாந்து ; மாஸ் காட்டும் குட்டி அணிகள்…!!
Author: Babu Lakshmanan26 June 2023, 9:34 pm
இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – நெதர்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் சேர்த்தது. பூரன் (104), கிங் (76) ரன்கள் குவித்தனர். கடின இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்து ஆட்டத்தை சமன் செய்தது. தேஜா நிதமனுரு (111), கேப்டன் எட்வார்ட்ஸ் 67 ரன்கள் குவித்தனர்.
ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. நெதர்லாந்து அணிக்காக லீடேவும், எட்வர்ட்சும் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் பந்து வீசினார். இந்த ஓவரின் 6 பந்துகளையும் எதிர்கொண்ட லீடே, தலா 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு, 30 ரன்களை குவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 பந்துகளை மட்டுமே சந்தித்து, 8 ரன்களை குவித்தது சார்லஸ், ஹோல்டர் ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி, நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில், மற்றுமொரு தோல்வி அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.