டெஸ்ட் போட்டியின் கிளைமேக்ஸில் டி20 போல ஆட்டம்… இலங்கை வீழ்த்தி த்ரில் வெற்றி நியூசிலாந்து ; கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 5:16 pm

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று இருப்பது இந்திய ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேற வேண்டுமானால், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஏதேனும் ஒரு போட்டியை நியூசிலாந்து அணி ஜெயிக்கவோ, சமன் செய்யவோ வேண்டும் என்று இருந்தது. எனவே, இந்த டெஸ்ட் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்களும், நியூசிலாந்து அணி 373 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் 302 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட்டை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது. இதனால், கடைசி நாள் ஆட்டத்தில் 257 ரன்களை எடுத்தால் நியூசிலாந்து அணியும், 9 விக்கெட்டை கைப்பற்றினால் இலங்கை அணியும் வெற்றி பெறும் என்ற சூழல் இருந்தது.

மேலும், இந்த போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறி விடும். இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

இந்த நிலையில், இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கியதும், லாதம் 25 ரன்னிலும், நிகோல்ஸ் 20 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து இணைந்த வில்லியம்சன் – மிட்சல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் நிதானமாக விளையாட, மிட்செல் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி ரன்களை சேர்த்தார். 86 பந்துகளில் 81 ரன்கள் குவித்து மிட்சல் ஆட்டமிழந்த நிலையில்,
நியூசிலாந்து அணி வெற்றி பெற கடைசி 10 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த சூழலில், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. இருப்பினும், கேன் வில்லியம்சனின் நேர்த்தியான ஆட்டத்தால் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளில் சிங்கிள் கிடைத்தது. 3வது பந்தில் விக்கெட் விழ கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, 4வது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடித்தார்.இதனால் 2 பந்துகளில் 1 ரன் தேவை ஏற்பட்டபோது 5 ஆவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஹூக் ஷாட் அடிக்க வில்லியம்சன் முற்பட்ட போது பந்து தவறி கீப்பரை நோக்கி சென்றது. அப்போது 1 ரன் ஓடிய வில்லியம்சன் அணியை வெற்றி பெற வைத்தார்.

நியூசிலாந்து அணி கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தரமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த போட்டி பார்க்கப்படுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இலங்கையை நியூசிலாந்து அணி த்ரில்லாக தோற்கடித்ததை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 452

    0

    0