வரலாற்றில் முதல்முறை… டி20 போல ஆடிய டாப் பேட்டர்கள்.. ஒரே நாளில் 4 வீரர்கள் சதம்… திணறிய பாகிஸ்தான் பவுலர்கள்… துவம்சம் செய்த இங்கிலாந்து!
Author: Babu Lakshmanan1 December 2022, 5:53 pm
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை குவித்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் க்ரவுளி, டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் டி20 கிரிக்கெட் போல அடித்து ரன்களை குவித்தனர். க்ரவ்ளி (122), டக்கெட் (107) ஆகியோர் சதம் அடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, ரூட் 23 ரன்னில் ஆட்டமிழந்தாலும், போப் மற்றும் ப்ரூக்ஸ் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். போப் 108 ரன்னில் அவுட்டாகிய நிலையில், ப்ரூக்ஸும் சதமடித்தார்.
முதல் நாளிலேயே அதிரடியாக இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாடியதால், அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் சேர்த்தது. ப்ரூக்ஸ் 101 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றிலேயே முதல் நாள் ஆட்டத்தில் ஒரே அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல்முறையாகும்.