பும்ராவை பார்த்து அரண்டு போன பாக்., வீரர்கள்.. கடைசி நேரத்தில் திக் திக் : டி20 உலகக் கோப்பையில் இந்தியா த்ரில் வெற்றி!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 10:42 am
india
Quick Share

ஐசிசி (ICC) தொடர்களில் மட்டுமே சந்திக்கின்ற அணிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று 8-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சந்தித்தனர். டி20 உலகக்கோப்பை தொடரின் 19-வது போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான விராட் கோலி, மலைபோல் நம்பி இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 4 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அவரை தொடர்ந்து நன்றாக விளையாட தொடங்கிய ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவர்களை தொடர்ந்து பேட்டிங் வந்த ரிஷப் பண்டும், அக்சர் பட்டேலும் பொறுமையாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அதிலும் ரிஷப் பண்ட் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி போட்டியை இந்திய அணியின் கட்டுக்குள் வைத்திருந்தார்.

இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையிலே இருந்தது. அதன் பிறகு 10 ஓவர்களை கடந்தவுடன் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகச்சிறப்பாக அமைந்தது. இதன் மூலம் ரிஷப் பண்ட், சிவம் துபே, ஜடேஜா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க முடியாமல் திணறியது.

இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்துக்கு 42 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மேலும், 120 ரன்கள் என்ற எளிய இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

அதனை தொடர்ந்து தொடக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக பாபர் அசாம் அவுட் ஆக அவருடன் உஸ்மான் கான் கூட்டணி அமைத்து விளையாடினார்.

சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் விழ ஒரு பக்கம் முகமது ரிஸ்வான் மட்டும் தட்டி தட்டி ரன்களை சேர்த்தார். இறுக்கமாக சென்ற இந்த போட்டி ரிஸ்வான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு விறுவிறுப்பாக நகர்ந்தது.

மேலும், அவரது விக்கெட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடியது. இதன் மூலம் படிப்படியாக இந்திய அணி போட்டிக்குள் திரும்பி வந்தது. இறுதி வரை அங்கும் இங்கும் சென்ற போட்டியில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை வீசிய அர்ஷதீப் சிங் 12 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து, 1 விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றதுடன் இந்த தொடரின் 2-வது வெற்றியையும் பதிவு செய்து புல்லிபட்டியலிலும் முன்னிலை உள்ளது.

Views: - 166

0

0