22 வருடத்திற்கு பிறகு.. சொல்லி அடித்த ஸ்டோக்ஸ் – மெக்குல்லம் காம்போ.. பாகிஸ்தானுக்கு சொந்த மண்ணில் தொடரும் சோகம்!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 4:34 pm

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டக்கெட் 63 ரன்களும், போப் 60 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுக்களும், ஜாகித் மகமுது 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பாபர் ஆசாம் 75 ரன்களும், ஷாகில் 63 ரன்களும் எடுத்தனர்.

79 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 354 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றரை நாட்கள் எஞ்சியிருந்த நிலையில், இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு சம அளவில் இருந்தது.

இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 151 ரன்களும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினால் போதும் என்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில், அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதனால், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸும் மற்றும் பயிற்சியாளராக மெக்குல்லம்மும் பொறுப்பேற்ற பிறகு கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 8 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 420

    0

    0