எமன் போல வந்த எல்கர்… சதம் அடித்து அமர்க்களம்… 2வது நாள் ஆட்டத்திலும் கை ஓங்கிய தென்னாப்ரிக்கா…!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 9:43 pm

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்ரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணி தென்னாப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் திணறினர். கேப்டன் ரோகித் ஷர்மா 5 ரன்னில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பர்கரின் பந்துவீச்சில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் (17), கில் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. பின்னர், நட்சத்திர வீரர் கோலியுடன் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

இருப்பினும் உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி (38), ஸ்ரேயாஷ் ஐயர் (31) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், வந்த கேஎல் ராகுல் நங்கூரம் போல நின்று ஆடினார். மறுமுனையில் ஷ்ரதுல் தாகூர் (24) ஓரளவுக்கு கைகொடுத்தார். இதனால், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.

2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் விக்கெட்டுக்கள் மறுமுனையில் வீழ்ந்தாலும், சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் சதம் (101) அடித்து ஆட்டமிழந்தார். இது அவருடைய 8வது சதமாகும். இதன்மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 245 ரன் குவித்தது.

இதைத் தொடர்ந்து பேட் செய்த தென்னாப்ரிக்கா அணி, மார்க்ரம் (5) விக்கெட்டை ஆரம்பித்திலேயே இழந்தாலும், எல்கர் – ஜோர்ஷி ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர், ஜோர்ஷி (28), பீட்டர்சென் (2), பெட்டிங்காம் (56), வெரேயின் (4) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் எல்கர் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். 2வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எல்கர் 140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 684

    0

    0