நூலிழையில் தப்பிய தோனி சாதனை… பாக்., வீரர்களை பின்னுக்கு தள்ளிய கில், சிராஜ் ; ODI தரவரிசைப் பட்டியலில் அசைக்க முடியாத இந்தியா…!!
Author: Babu Lakshmanan8 November 2023, 4:00 pm
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் தோல்வியையே சந்திக்காமல் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அனைத்திலும் வெற்றி பெற்று மிகவும் கம்பீரமாக புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஜொலிப்பதனால், பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம், 24 வயதில் முதலிடத்தை பிடித்து கில் அசத்தியுள்ளார். இந்த இடத்தை பிடிக்க அவருக்கு 41 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 38 இன்னிங்சில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 2வது இடத்திலும், தென்னாப்ரிக்க வீரர் டிகாக் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிட் கோலி 4வது இடத்திலும், ரோகித் ஷர்மா 6வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இதேபோல, பவுலர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் சிராஜ் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் தென்னாப்ரிக்காவின் கேஷவ் மகாராஜாவும், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவும் உள்ளனர். 4வது இடத்தில் குல்தீப் யாதவும், 8வது இடத்தில் பும்ராவும், 10வது இடத்தில் ஷமியும் உள்ளனர்.
ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இந்தியா, 2வது இடத்தில் இங்கிலாந்து, 3வது இடத்தில் நியூசிலாந்து, 4வது இடத்தில் ஆஸ்திரேலியா, 5வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது.