டி20 உலகக்கோப்பையில் தொடரும் ராகுலின் மோசமான ஃபார்ம்…. டாப் அணிகளுடன் கடைசியாக அவர் அடித்த ரன்கள் தெரியுமா..? இதுக்கு தவான் சூப்பர்…!!
Author: Babu Lakshmanan10 November 2022, 2:32 pm
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர் கேஎல் ராகுலின் மோசமான ஃபார்ம் தொடருவது ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக வழக்கம் போல, கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுல், இந்தப் போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வருவாரா..? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்தது.
ஆனால், இந்தப் போட்டியிலும் கேஎல் ராகுல் ஏமாற்றம் அளித்தார். போட்டியின் 3வது ஓவரின் முதல் பந்தில் 5 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே, வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 50 ரன்களை விளாசிய அவர், முன்னணி அணிகளுடனான முக்கியமான ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
சர்வதேச புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் மோசமான ரெக்கார்டே வைத்துள்ளார். அதாவது, வெறும் 39 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 76.47ஆகவும், சராசரி 7.8ஆக மட்டுமே உள்ளது.
கடைசியாக அவர் விளையாடிய முன்னணி அணிகளுடனான 5 போட்டிகளின் விபரம்
துபாய் – பாகிஸ்தானுக்கு எதிராக – 3 ரன்கள் (8)
துபாய் – நியூசிலாந்துக்கு எதிராக – 18 ரன்கள் (16)
மெல்போர்ன் – பாகிஸ்தானுக்கு எதிராக – 4 ரன்கள் (8)
பெர்த் – தென்னாப்ரிக்காவுக்கு எதிராக – 9 ரன்கள் (14)
அடிலெய்டு – இங்கிலாந்துக்கு எதிராக – 5 ரன்கள் (5)
இதனிடையே, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக, கேஎல் ராகுலுக்கு பதிலாக தவானை எடுத்திருக்கலாம் என்று கருத்துக்கள் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.