கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி : தொடரைக் கைப்பற்றி இலங்கையை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்திய அணி…
Author: kavin kumar27 February 2022, 11:05 pm
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் விரைவாக ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த, அசலங்கா 4 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து ஜரித் லியநாகே(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 74 ரன்கள் (38 பந்துகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற தினேஷ் சண்டிமால் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, அவருடன் தொடக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சனும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியிலும் அபாரமாக ஆட, மறுமுனையில் தீபக் ஹூடா(21) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(5) ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார். முதல் 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து நாட் அவுட்டில் முடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து ஹாட்ரிக் அரைசதத்தை பதிவு செய்ததுடன், இந்த போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில்நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 17வது ஓவரிலேயே 147 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்று, 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.